தமிழக அரசு மானியங்களை தொழில் நிறுவனங்கள் பயன்படுத்தி கொள்ள அழைப்பு
தமிழ்நாடு அரசு வழங்கும் மானியங்களை தூத்துக்குடி மாவட்ட குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில்முனைவோர் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
ஊரகப்பகுதிகளில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் மேம்பாட்டினை உறுதி செய்வதிலும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் பங்கினை உணர்ந்துள்ள தமிழ்நாடு அரசு. இவற்றின் வளர்ச்சிக்காகவும் மானியங்களை வழங்கி வருகிறது. மேம்பாட்டுக்காகவும் பல்வேறு அனைத்து குறு உற்பத்தித் தொழில் நிறுவனங்கள்.
பின்தங்கிய வட்டாரங்கள் என அறிவிக்கை செய்யப்பட்ட வட்டாரங்களில் (தூத்துக்குடி மாவட்டத்தைப் பொறுத்த வரை. தூத்துக்குடி தவிர்த்த பிற வட்டாரங்கள்) மற்றும் அரசு சார் நிறுவனங்களின் தொழிற்பேட்டைகளில் அமைந்த சிறு மற்றும் நடுத்தர உற்பத்தித் தொழில் நிறுவனங்கள், அனைத்து வட்டாரங்களிலும் அமைந்த வேளாண் சார் சிறு மற்றும் நடுத்தர உற்பத்தித் தொழில் நிறுவனங்கள்.
தானி உதிரி பாகங்கள், ஆயத்த ஆடைகள், பாரம்பரியத் தொழில்கள். மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட சிறப்பினங்களை உற்பத்தி செய்யும் சிறு மற்றும் நடுத்தர உற்பத்தித் தொழில் நிறுவனங்கள் புதிதாகத் தொடங்கும் போதும் விரிவாக்கம் செய்யும் நேர்விலும் இயந்திர தளவாடங்களின் மதிப்பீட்டில் 25% மூலதன மானியம் வழங்கப்படுகிறது. மேலும் குறு தொழில் உற்பத்தி நிறுவனங்களுக்கு கூடுதல் முதலீட்டு மானியமாக ரூ.10.00 இலட்சம் வரை வழங்கப்படுகிறது.
குறு உற்பத்தித் தொழில் நிறுவனங்கள் புதிதாகத் தொடங்கும் போதும் விரிவாக்கம் செய்யும் நேர்விலும் முதல் மூன்றாண்டுகளுக்கு 20% குறைவழுத்த மின் மானியம் வழங்கப்படுகிறது. குறு மற்றும் சிறு நிறுவனங்கள் தொழில்நுட்ப மேம்பாட்டுக்காகவும் கடன் உத்தரவாதப் பிணையத் திட்டத்தின் கீழும் பெறும் வங்கிக் கடனுக்கு 5% பின்முனை வட்டி மானியம் வழங்கப்படுகிறது.
20 பேருக்கு மேற்பட்ட தொழிலாளர்களைக் கொண்ட நிறுவனங்களுக்கு நிறுவனம் தொழிலாளர் வைப்பு நிதிக்குத் தன் பங்காகக் செலுத்தும் தொகைக்கு ஈடாக ஒரு நபருக்கு மாதமொன்றுக்கு ரூ.2000 வரை முதல் மூன்றாண்டுகளுக்கு ஊதியப்பட்டியல் மானியமாக வழங்கப்படுகிறது.
தொழில் நிறுவனங்கள் தரச்சான்றிதழ் பெறுவதை ஊக்குவிக்கும் விதமாக தரச் சான்றிதழ் பெறுவதற்கான கட்டணம் மற்றும் செலவினை ஈடுகட்டும் விதமாக உள்நாட்டுத் தரச்சான்றிதழ் பெறுகையில் ரூ.2 இலட்சம் வரையிலும் பன்னாட்டுத் தரச் சான்றிதழ் பெறுகையில் ரூ.10 இலட்சம் வரையிலும் தரச் சான்றிதழ் மானியம் வழங்கப்படுகிறது.
தமிழ்நாடு அரசு குறு, சிறு மற்றும் நடுத்தர உற்பத்தித் தொழில் நிறுவனங்கள் தம் உற்பத்தி நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தும் ஆற்றல் வள மூலங்களைச் சிக்கனமான முறையில் பயன்படுத்துவதை உறுதி செய்யும் விதமாக ஆற்றல் தணிக்கை மேற்கொள்வதையும் தணிக்கையிற்பெறப்பட்ட பரிந்துரைகளைச் செயல்படுத்துவதையும் ஊக்குவிக்க முனைந்துள்ளது.
இதற்காக ஆற்றல் தணிக்கை மேற்கொள்ளும் நிறுவனங்களுக்கு அதற்கான கட்டணத் தொகையில் 75% அதிக பட்சம் ரூ.1 இலட்சம் வரையிலும் தணிக்கைப் பரிந்துரையின் அடிப்படையில் தொழிலக இயந்திரங்கள் மற்றும் தளவாடங்களை மாற்றும் நேர்வுகளில் அதற்கான செலவில் 50% அதிக பட்சம் ரூ.10.00 இலட்சம் வரையிலும் ஆற்றல் தணிக்கை மானியம் வழங்கப்படுகிறது.
பின்தங்கிய வட்டாரங்கள் என அறிவிக்கை செய்யப்பட்ட வட்டாரங்களில் (தூத்துக்குடி மாவட்டத்தைப் பொறுத்த வரை, தூத்துக்குடி தவிர்த்த பிற வட்டாரங்கள்) அமைந்த குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்கள் தொழிலகப் பயன்பாட்டுக்கென வாங்கிய நிலத்துக்கான முத்திரைத்தாள் மற்றும் பதிவுக்கட்டணத்தில் 50% மானியமாகத் திருப்பித் தரப்படும்.
இந்தியா மற்றும் வெளிநாடுகளில் காப்புரிமை பெறும் நேர்வுகளில் அதற்கான கட்டணத்தில் 75% அதிகபட்சம் ரூ.3.00 இலட்சம் வரை காப்புரிமை மானியமாக வழங்கப்படும். வணிக முத்திரை மற்றும் புவிசார் குறியீடு பதிவு செய்தால் அதற்கான கட்டணத்தில் 50% அதிக பட்சம் ரூ.1.00 இலட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது.
தமிழ்நாடு அரசு வழங்கும் இத்தகு மானியங்களை தூத்துக்குடி மாவட்ட குறு. சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில்முனைவோர் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்றும் இதுகுறித்த கூடுதல் விவரங்களைப் பெற பொது மேலாளர், மாவட்டத் தொழில் மையம், தூத்துக்குடி அவர்களை நேரடியாகவோ 0461-2340152 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தெரிவித்துள்ளார்.
கருத்துக்கள்