குலசை முத்தாரம்மன் கோவில் தசரா விழா: வேடம் அணியும் பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள்
பிரசித்திபெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா வருகிற 23-ந் தேதி (23.9.2025) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அக்டோபர் 2-ந் தேதி (2.10.2025) மகிஷாசுர சம்ஹாரம் நடக்கிறது. தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்படும் முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று கோவில் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்தது. இக்கூட்டத்திற்கு திருச்செந்தூர் உதவி கலெக்டர் சுகுமாறன் தலைமை தாங்கினார். கோவில் அறங்காவலர் குழு தலைவர் கண்ணன், அறங்காவலர்கள் கணேசன், வெங்கடேஷ்வரி, கோவில் ஆய்வாளர் முத்துமாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயல் அலுவலர் வள்ளிநாயகம் வரவேற்றார்.
குலசேகரன்பட்டினம் இன்ஸ்பெக்டர் கண்ணன், போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சதிஷ் குமார் உட்பட அரசு அதிகாரிகள், சமூக ஆர்வலர் குணசீலன், உடன்குடி பஞ்சாயத்துயூனியன் முன்னாள் துணைத்தலைவர் ராஜதுரை, குலசேகரன்பட்டினம் பஞ்சாயத்துதுணைத் தலைவர் கணேசன் உட்பட 200-க்கும் மேற்பட்ட தசரா குழுவினர் கலந்து கொண்டு கருத்துகளை தெரிவித்தனர்.
தசரா குழுவினர் கூறுகையில், குலசேகரன்பட்டினம் சிதம்பரேஸ்வரர் கடற்கரையில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள், மின் விளக்கு, குடி நீர், மருத்துவ முகாம், கூடுதல் ஆம்புலன்ஸ், கூடுதல் கழிப்பறைகள், பெண்கள் உடை மாற்றும் அறைகள் அமைக்க வேண்டும், 1-ம் திருவிழா மற்றும் 10, 11-ம் திருவிழா நாட்களில் ஒரு வழி பாதை அமைத்து போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த வேண்டும், குலசேகரன்பட்டினம்-திருச்செந்தூர் ரோட்டில் உள்ள முட்செடிகளை அகற்ற வேண்டும், அனைத்து மெயின் ரோடுகளையும் மராமத்து பணி செய்ய வேண்டும். முக்கிய திருவிழா நாட்களில் உடன்குடி, குலசேகரன்பட்டினம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும், என தெரிவித்தனர்.
இதற்கு பதிலளித்து உதவி கலெக்டர் பேசுகையில், தசரா குழுவினர்களின் ஆலோசனைகள் அனைத்தும் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இந்தாண்டு கூடுதல் கழிப்பறைகள், குடிநீர் வசதி, மருத்துவ முகாம்கள், வாகன நிறுத்தங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வேடம் அணியும் பக்தர்கள் முக்கிய கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும். குறிப்பாக இந்த பக்தர்கள் இரும்பினால் செய்யப்பட்ட ஆயுதங்கள், சாதி அடையாளம் கொண்ட கொடிகள் கொண்டு வரக்கூடாது. இதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதைமீறி கொண்டு வரும் தசரா குழுவினர் அனைவர் மீதும் வழக்கு பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
கருத்துக்கள்