advertisement

வழக்கறிஞருக்கு நஷ்ட ஈடு வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு

செப். 03, 2025 11:13 முற்பகல் |

 

சேவைக் குறைபாடு காரணமாக பாதிக்கப்பட்ட வழக்கறிஞருக்கு மொபைல் கடைக்காரர் ரூ.15,000 வழங்க தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.

திருநெல்வேலி மாவட்டம் சாந்தி நகரைச் சார்ந்த வழக்கறிஞர் முத்துராம் என்பவர் செய்துங்கநல்லூரிலுள்ள ஒரு மொபைல் கடையில் ஒரு லேப்டாப் வாங்குவதற்காக ரூபாய் 35,000 ஐ அட்வான்ஸ் தொகையாக செலுத்தியுள்ளார். மீதிப்பணத்தை மடிக்கணிணியை பெற்றுக் கொள்ளும் போது செலுத்திக் கொள்ளலாம் எனவும், 3 நாட்களில் டெலிவரி செய்யப்படும் எனவும் கடைக்காரர் உறுதி அளித்துள்ளார். 

இதற்கிடையில் மீதி பணத்தையும் செலுத்த வேண்டும் எனக் கூறியதால் அதையும் நுகர்வோர் செலுத்தி விட்டார். ஆனால் முழுத் தொகையையும் செலுத்திய பிறகும் குறிப்பிட்ட நாளில் மடிக்கணிணி டெலிவரி செய்யப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட நுகர்வோர் தனது மகனின் கல்வி பயன்பாட்டிற்கு மிக அவசரமாக மடிக்கணிணி தேவைப்பட்டதால் மற்றொரு கடைக்காரரிடம் அதிக விலை கொடுத்து புதிதாக வாங்கியுள்ளார்.

எனவே முழுப்பணத்தையும் பெற்றுக் கொண்டு குறிப்பிட்ட காலத்திற்குள் மடிக்கணினி டெலிவரி செய்யாத மொபைல் கடைக்காரருக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆனால் இதன் பின்னரும் உரிய பதில் கிடைக்காததால் மன உளைச்சலுக்கு ஆளான நுகர்வோர் தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சக்கரவர்த்தி, உறுப்பினர்கள் ஆ.சங்கர், நமச்சிவாயம் ஆகியோர் சேவை குறைபாடு மற்றும் மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடு தொகை ரூபாய் 10,000 வழக்கு செலவுத் தொகை ரூபாய் 5,000 ஆக மொத்தம் ரூபாய் 15,000 ஐ ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் இல்லையென்றால் அத்தொகையை செலுத்தும் தேதி வரை ஆண்டொன்றுக்கு 9 % வட்டியுடன் வழங்க வேண்டும் என உத்திரவிட்டனர்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement