கோவில்பட்டியில் கஞ்சா வழக்கில் கைதான 3 பேர் மீது குண்டாஸ்
கோவில்பட்டியில் 10 கிலோ கஞ்சாவைப் பதுக்கிய வழக்கில் கைதான 3பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் சிறையில் அடைக்கப்பட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்துக்குள்பட்ட கிருஷ்ணா நகர் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவின்பேரில், கோவில்பட்டி காவல் துணைக் கண்காணிப்பாளர் ஜெகநாதன் தலைமையில் உதவி ஆய்வாளர் செந்தில்குமார், போலீசார் ரோந்து சென்றனர்.
அங்குள்ள காட்டுப் பகுதியில் சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த காரை சோதனையிட்டபோது, கோவில்பட்டி சாஸ்திரி நகர் ராமையா மகன் சங்கிலிபாண்டி (39), கணேஷ்நகர் நடராஜ் மகன் நாகராஜ் (23), தூத்துக்குடி டி.என்.டி. காலனி மாடசாமி மகன் மகாராஜா ஆகியோர் 10 கிலோ கஞ்சாவைப் பதுக்கிவைத்திருப்பது தெரியவந்தது. போலீசார் வழக்குப் பதிந்து கஞ்சா, 2 கார்களைப் பறிமுதல் செய்தனர். மூவரையும் கைது செய்து தூத்துக்குடி பேராவூரணி சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன் அளித்த அறிக்கை, மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் பரிந்துரை ஆகியவற்றின் பேரில், மூவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் க. இளம்பகவத் உத்தரவிட்டார். அதன்பேரில், மூவரும் நேற்று குண்டர் தடுப்பு காவலுக்கு பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனர். இந்தச் சட்டத்தின்கீழ் நிகழாண்டு இதுவரை 95 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
கருத்துக்கள்