பாரதியார் இல்லத்தில் அமைச்சர் கீதாஜீவன் நேரில் ஆய்வு!
மகாகவி பாரதியார் வாழ்ந்த எட்டயபுரம் இல்லத்தின் சீரமைப்புப் பணிகளை அமைச்சர் கீதா ஜீவன், மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்து பணிகள் குறித்து கேட்டறிந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் பெருமாள் கோயில் தெருவில் மகாகவி பாரதியார் பிறந்த இல்லம் அமைந்திருக்கிறது. அவரது இல்லத்தை 1973 ஆம் ஆண்டு வரலாற்றுச் சின்னமாக தமிழ்நாடு அரசு அறிவித்தது. இந்த இல்லத்தில் பாரதியார் பயன்படுத்திய பொருட்கள் மற்றும் அவரது வாழ்க்கை குறிப்புகள் காட்சியாக்கப்பட்டுள்ளது. அவரது புகைப்படங்களும் மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கடந்த மார்ச் 25 ஆம் தேதி இல்லத்தின் முன்பகுதியில் உள்ள மேற்கூரை திடீரென இடிந்து விழுந்து சேதமடைந்தது. இதனையடுத்து, இந்த இல்லம் பழமை மாறாமல் மறுசீரமைக்கப்படும் என தூத்துக்குடி ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்திருந்தார்.அதன்படி, பாரதியார் வாழ்ந்த இல்லத்தை பழமை மாறாமல் புதுப்பிப்பதற்காக ரூ.1.53 கோடி அரசு நிதி ஒதுக்கீடு செய்தது. இதனையடுத்து, சீரமைப்புப் பணிகள் தொடங்கி கடந்த ஆறு மாதங்களாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், சீரமைப்புப் பணிகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் துரிதப்படுத்தியுள்ளனர். குறிப்பாக, வீட்டின் பழமை மாறாமல் இருக்கும் வகையில், கட்டடப் பணியில் கடுக்காய், கருப்பட்டி, சுண்ணாம்பு கலவை கொண்டு சீரமைக்கும் பணியானது நடைபெற்று வருகிறது. இந்த பராமரிப்பு பணிகளை அமைச்சர் கீதா ஜீவன், மாவட்ட ஆட்சியர் இளம் பகவத், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் உள்ளிட்டோர் நேற்று ஆய்வு செய்து, பணிகள் குறித்து கேட்டறிந்தனர்.விரைவில் இல்லத்தின் கட்டுமான பணிகள் முடிவுற்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் என கூறப்படுகிறது.





கருத்துக்கள்