இலங்கைக்குக் கடத்த முயன்ற பீடி இலைகள் பறிமுதல்
குளத்தூர் அருகே கடற்கரை வழியாக இலங்கைக்குக் கடத்துவதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,400 கிலோ பீடி இலைகளை க்யூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் உட்கோட்டம், குளத்தூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கல்லூரணி பகுதியில் இருந்து கடல் வழியாக இலங்கைக்குப் பீடி இலைகள் கடத்தப்படவுள்ளதாகக் க்யூ பிரிவு ஆய்வாளர் விஜய அனிதாவுக்கு ரகசியத் தகவல் கிடைத்ததின் பேரில், காவல்துறையினர் அடங்கிய குழுவினர் இன்று அதிகாலை கல்லூரணி கடற்கரைச் சாலையில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.அப்போது கல்லூரணி கடற்கரைக்குச் செல்லும் வழியில் மறைவான ஓரிடத்தில் ஏராளமான மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.
சோதனையில், அவை ஒவ்வொன்றும் சுமார் 35 கிலோ எடை கொண்ட 40 மூடை பீடி இலைகள் என்பது தெரியவந்தது. இலங்கைக்குப் படகு மூலம் கடத்துவதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த இந்த 1,400 கிலோ பீடி இலைகளையும் போலீசார் உடனடியாகப் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலைகளின் சர்வதேச சந்தை மதிப்பு சுமார் 50 லட்சம் ரூபாய் எனத் தெரிகிறது.





கருத்துக்கள்