சதுரகிரியில் ஆடி அமாவாசை திருவிழா : 2500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு..!
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே, மேற்கு தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் உள்ளது. இங்கு ஆடி அமாவாசை அன்று நடைபெறும் திருவிழா முக்கியானதாகும். இதில், லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வர்.
இந்நிலையில் 2025 -ஆம் ஆண்டுக்கான துரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா இன்று தொடங்கி வரும் 25-ஆம் தேதி வரை நடக்கவுள்ளது. வரும் ஜூலை 24-ஆம் தேதி ஆடி அமாவாசை வருகிறது. இந்த ஆடி அமாவாசையன்று லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள்.
இந்த ஆடி அமாவாசை திருவிழாவையொட்டி வனத்துறை சார்பில் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன்படி, கோயிலுக்கு காலை 06 மணி முதல் 12 மணி வரை மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுவர். மாலை 04 மணிக்குள் கோயிலில் இருந்து அடிவாரத்திற்கு திரும்ப வேண்டும். இரவில் தங்க அனுமதி கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மலைக்கு பிளாஸ்டிக் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களை கொண்டு செல்லக்கூடாது எனவும் அங்குள்ள ஓடைகளில் குளிக்கக் கூடாது எனவும், அனுமதிக்கப்பட்ட பாதையை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் காவல் துறை தெரிவித்துள்ளது.
மேலும், வனப்பகுதிக்குள் கால்நடைகளை கொண்டு செல்லவும், பலியிடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், வயதானவர்கள், கைக்குழந்தைகள், கர்ப்பிணிகள், உடல்நலம் குன்றியவர்கள் கோயிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
அத்தோடு, மலை கோவிலுக்கு செல்லும் போது மதுபாட்டில்கள், சிகரெட், போதை வஸ்துகள் எடுத்து செல்ல அனுமதியில்லை. மேலும், வனவிலங்குகளுக்கு இடையூறோ, உணவோ வழங்குதலோ கூடாது என்றும், ஒலிபெருக்கி போன்றவை பயன்படுத்தக்கூடாது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
மேலும், பக்தர்களின் வசதிக்காக விருதுநகர், மதுரை, திண்டுக்கல், தேனி, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து இன்று முதல் சதுரகிரி கோயிலுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. மலை அடிவாரம், மலைப்பாதை, கோயில் உள்ளிட்ட பகுதியில் தீயணைப்பு துறையினர், பேரிடர் மீட்பு படையினர், மற்றும் போலீசார் என 2500-க்கும் மேற்பட்ட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுத்தப்பட்டுள்ளனர்.
கருத்துக்கள்