தமிழ்நாட்டை நெடுங்காலம் ஆண்டுவர வேண்டும் - முதல்வருக்கு வைரமுத்து வாழ்த்து
முழுநலத்தோடு மு.க.ஸ்டாலின் மீண்டு வரவேண்டும் என வைரமுத்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று நடைபயற்சி மேற்கொண்டிருந்தபோது திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் கிரிம்ஸ் ரோட்டில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவர் மருத்துவமனையில் 3 நாட்கள் ஓய்வு எடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். இந்த நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் குணமடைய வேண்டும் என கவிஞர் வைரமுத்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,
"என்னரும் சகோதரர்
தமிழ்நாட்டின்
மாண்புமிகு முதலமைச்சர்
திருக்குவளைக் கலைஞரின்
திருச்செல்வர்
தளபதி மு.க.ஸ்டாலின்
மருத்துவமனை சேர்ந்தார்
என்ற செய்திகேட்டுச்
சிந்தை உடைந்தேன்
மருத்துவர்களின்
உள்வட்டாரத்தை உசாவி
அவருக்கு இடர் ஒன்றுமில்லை
என்று அறிந்தபிறகுதான்
அமைதி அடைந்தேன்
உழைப்பு உழைப்பு
எத்துணை உழைப்பு!
அது
உடம்பா? இரும்பா?
முற்றிலும்
குணமடைந்த பிறகு
அவர் வாழ்க்கை முறையைச்
சற்றே மாற்ற வேண்டும்
இனி அவர்
கரும்பில் சாறெடுப்பதுபோல்
உழைக்காமல்
பூவில் தேனெடுப்பதுபோல்
உழைக்க வேண்டும்
இயக்கம்
இன்று நிலைபெற்றிருப்பதே
மூதாதையரின் கொள்கைமீதும்
தளபதியின்
முதுகெலும்பின்மீதும்தான்
முழுநலத்தோடு
அவர் மீண்டு வரவேண்டும்;
தமிழ்நாட்டை நெடுங்காலம்
ஆண்டுவர வேண்டும் என்று
குழைந்த உள்ளத்தோடும்
குழந்தை உள்ளத்தோடும்
வாழ்த்துகிறேன்" என பதிவிட்டுள்ளார்.
கருத்துக்கள்