அரசு கல்லூரியில் 574 கெளரவ விரிவுரையாளர் பணியிடங்கள் : விண்ணப்பிக்க அழைப்பு
தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் கல்லூரிகளில் தேவைக்கு ஏற்ப 574 கெளரவ விரிவுரையாளர்களை நியமிக்க தமிழ்நாடு அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியுள்ளவர்கள் ஆன்லைன் வழியாக ஆகஸ்ட் 4 வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் 2025-26 கல்வி ஆண்டில் மாணவர்களுக்கு கல்வி வழங்க தேவைக்கு ஏற்ப 574 கெளரவ விரிவுரையாளர்களை நியமிக்க தமிழ்நாடு அரடு முடிவு செய்துள்ளது. மேலும், இதற்கான புதிய இணையதளத்தை உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தொடங்கி வைத்த நிலையில், ஆகஸ்ட் 4 வரை தகுதியும், ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ், கணினி பயன்பாடு, உயிர் வேதியியல், உயிர் தொழில்நுட்பம், தாவரவியல், தொழில் நிர்வாகம், வேதியியல், வணிகம், கணினி அறிவியல், கார்ப்பரேட் செக்கரேட்ஷிப், பொருளாதாரம், ஆங்கிலம், புவியியல், வரலாறு, தகவல் தொடர்பியல், கடல் உயிரியல், கணிதம், நுண்ணுயிரியல், ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறைகள், உடற்கல்வி, இயற்பியல், அரசியல் அறிவியல், உளவியல், பொது நிர்வாகம், சமூகவியல், காட்சி தொடர்பியல், விலங்கியல் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் 38 மாவட்டங்களில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிப்பது எப்படி?
ஆர்வமுள்ளவர்கள் https://tngasa.org/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.200 செலுத்த வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பிரிவினர் ரூ.100 செலுத்தினால் போதுமானது.
விண்ணப்பதார்கள் ஒரு மண்டலத்திற்கு 3 மாவட்டங்களை வரை விருப்பப் பட்டியலில் தேர்வு செய்யலாம். விண்ணப்பதார்களின் புகைப்படம், கல்வித்தகுதிக்கான சான்றிதழ்கள், SET/SLET/NET/ NET-JRF ஆகியவற்றுக்கான சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
விண்ணப்பதார்களின் கல்வித்தகுதி மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். கல்வித்தகுதிக்கு 85 மதிப்பெண்கள் மற்றும் நேர்காணல் 15 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதில் பிஎச்.டி உடன் NET & JRF, NET, SET/ SLET தகுதி பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இதற்கான விண்ணப்பங்கள் ஜூலை 21 முதல் தொடங்கப்பட்ட நிலையில், ஆகஸ்ட் 4 மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் நபர்களில் பணியிடங்களுக்கு ஏற்ப பாட வாரியாக ஆட்கள் கல்வித்தகுதி அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டு, நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். இதற்கான தகவல் இமெயில் மூலம் தெரிவிக்கப்படும். தேர்வு செய்யப்படுபவர்கள் 30 ஏப்ரல் வரை பணி அமர்த்தப்படுவார்கள்.
கருத்துக்கள்