கன்னியாகுமரி: அவ்வையார் அம்மனுக்கு கூழ், கொழுக்கட்டை படைத்து வழிபட்ட பெண்கள்
ஆடிமாதம் என்றாலே அம்மன் வழிபாட்டிற்கு உகந்த மாதம் ஆகும். இம்மாதங்களில் வரும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அம்மனை வழிபட்டால் நினைத்த காரியம் கைகூடும், தடங்கல்கள் விலகும், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
கன்னியாகுமரி மாவட்டம் தாழக்குடி அருகே பூதப்பாண்டி செல்லும் சாலையில் அவ்வையார் அம்மன் கோவில் உள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோவிலில் ஆடி மாதம் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் உள்ளூர் மட்டுமல்ல பிற மாவட்டங்களிலிருந்தும், அண்டை மாநிலமான கேரளாவிலிருந்தும் பெண்கள் திரளாக வந்து வழிபடுவார்கள்.
அந்தவகையில் இந்த ஆண்டு ஆடி மாதம் முதல் செவ்வாய்க் கிழமையையொட்டி இன்று காலையிலிருந்தே உள்ளூர் மற்றும் வெளியூர்களிலிருந்து பெண்கள் குடும்பம் குடும்பமாக வாகனங்களில் வந்தனர். அவர்கள் கோவில் வளாகத்திலும், அருகில் உள்ள தோப்புகளிலும் முகாமிட்டு, தாங்கள் கொண்டுவந்த பொருள்களை கொண்டு கூழ், கொழுக்கட்டை மற்றும் சர்க்கரை பொங்கல் தயார் செய்து அவ்வையார் அம்மனுக்கு படைத்து வழிபட்டனர்.
மேலும் முப்பந்தல் அருகே உள்ள ஆலமுடு அம்மன் கோவிலில் பூக்குழி கொடைவிழாவுக்கான கால்கோள் விழா நடைபெற்றது. இதையொட்டி காலையில் அபிஷேகம், மதியம் தீபாராதனை, அதனை தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.மேலும் குமரி மாவட்டத்திலுள்ள அம்மன் கோவில்களிலும் ஆடி முதல் செவ்வாய்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
கருத்துக்கள்