ராமநாதபுரத்தில் ஜூலை 26-ல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
ராமநாதபுரம் முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை, அறிவியல் கல்லூரியில் வரும் 26-ந் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளதென ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தகவல் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது :தமிழக அரசின் வேலைவாய்ப்பு , பயிற்சித்துறையின் சார்பில் ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு , தொழில்நெறி வழிகாட்டும் மையம், மாவட்ட நிர்வாகம் , ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 26.07.2025 சனிக்கிழமை அன்று ராமநாதபுரம், போக்குவரத்து நகர், ராமேஸ்வரம் மெயின் ரோடில் அமைந்துள்ள முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை , அறிவியல் கல்லூரியில் காலை 09.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை நடைபெற உள்ளது.
தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் 100-க்கும் மேற்பட்ட பல்வேறு முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு வேலைநாடுநர்களை தெரிவு செய்ய இருக்கின்றன. இம்மாவட்டத்தைச் சார்ந்த வேலைவாய்ப்பற்ற 8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு வரை படித்தவர்களும், ஐ.டி.ஐ., டிப்ளமோ, பொறியியல் பட்டதாரிகளும், முதுகலை, இளங்கலை பட்டதாரி ஆசிரிய பெருமக்கள், செவிலியர் , லேப் டெக்னீசியன் கல்வித் தகுதியுடைய அனைவரும் இம்முகாமில் கலந்து கொண்டு தங்களுக்கான பணியினை தாங்களே தேர்வு செய்வதற்கான இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முகாமில், பங்கேற்க விருப்பமுள்ள வேலைநாடுநர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதள முகவரியில் சென்று தமிழ்நாடு தனியார் துறை இணையம் (Tamil Nadu Private Job Portal)-இல் முன்பதிவு செய்து கொள்ளலாம்.முகாமில், கலந்து கொள்ள விருப்பமுள்ள தனியார் நிறுவனங்கள் இராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு , தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது rndjobfair01@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ, 04567 230160 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.
இத்தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தம் செய்யப்படும் நபர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எக்காரணத்தைக்கொண்டும் ரத்து செய்யப்படமாட்டாது எனத் தெரிவிக்கப்படுகிறது.
எனவே, வேலைநாடுநர்கள் தங்களது முழு பயோடேட்டா, அனைத்து அசல் கல்விச்சான்றுகள், குடும்ப அட்டை, ஆதார் அட்டை , பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் இத்தனியார் துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.
கருத்துக்கள்