தண்ணீர் பிடிக்க சென்ற பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம்
நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த ஒரு தம்பதிக்கு 13 மற்றும் 11 வயதில் 2 மகள்கள் உள்ளனர். ஊட்டியில் உள்ள தனியார் பள்ளியில் மூத்த மகள் 8-ம் வகுப்பும், இளைய மகள் 6-ம் வகுப்பும் படித்து வருகின்றனர். தினமும் மகள்கள் பள்ளிக்கு சென்றதும், பெற்றோர் வேலைக்கு சென்று விட்டு இரவு வீடு திரும்புவார்கள்.
இந்தநிலையில் கடந்த 15-ந் தேதி வீட்டுக்கு வந்த 8-ம் வகுப்பு மாணவி சோர்வாக காணப்பட்டாள். இதுகுறித்து மகளிடம் பெற்றோர் கேட்டு உள்ளனர். அப்போது சிறுமி தனக்கு நடந்தது குறித்து கூறினாள். அதாவது, மாணவி வசிக்கும் பகுதியை சேர்ந்த விஜய் என்ற வாலிபர், தனது வீட்டில் தண்ணீர் வருகிறது, சீக்கிரம் வந்து தண்ணீர் பிடித்துக் கொள்ளுங்கள் என்று மாணவியிடம் கூறி உள்ளார்.
இதைத்தொடர்ந்து தண்ணீர் பிடிக்க சென்ற மாணவியை கையை பிடித்து இழுத்து, அருகில் உள்ள கட்டிடத்திற்கு அழைத்து சென்று விஜய் பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். அப்போது மாணவி சத்தம் போட முயற்சி செய்ததால், வாயை பொத்தி மிரட்டியதாக தெரிகிறது. இதனால் பயந்து போன மாணவி, இதுகுறித்து உடனடியாக யாரிடமும் கூறவில்லை. மேலும் கடந்த சில நாட்களாக மாணவியை காதலிப்பதாக கூறி, விஜய் மாணவி பின்னால் சுற்றி வந்தும் உள்ளார்.
இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், இதுகுறித்து ஊட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் விஜயா தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி, போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விஜய்யை கைது செய்தனர். மேலும் மாணவி மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள்.
கருத்துக்கள்