நான் ரெடி; எடப்பாடி பழனிசாமி, டி.டி.வி.தினகரன் ரெடியா? - ஓபிஎஸ் கேள்வி
சட்டசபை தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது தொடர்பாக, ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் தேனி மாவட்டம் பெரியகுளம் கைலாசப்பட்டியில் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில், நிர்வாகிகளின் முடிவை எழுதித் தர கூறியதால் சலசலப்பு ஏற்பட்டதாக சொல்லப்பட்டது. ஆனால், ஓ.பன்னீர்செல்வம் இதை மறுத்துள்ளார். கூட்டம் குறித்து ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
“அ.தி.மு.க. இயக்கத்தின் அடிப்படை தொண்டர்களை மீட்க சட்டப்போராட்டத்தை நீதிமன்றத்தில் நடத்தி கொண்டிருக்கிறோம். நாடாளுமன்ற தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் நான் போட்டியிட காரணம், எங்கள் பக்கம் எவ்வளவு தொண்டர்கள் இருக்கிறாார்கள் என்பதை காட்டத்தான்.
தேர்தலுக்கு 12 நாட்கள் தான் இருந்த நிலையில், பலாப்பழ சின்னத்தில் போட்டியிட்டேன். ஆனால், என்னை தோல்விடைய சதி செய்து ஓ.பன்னீர்செல்வம் பெயரில் 6 பேரை தேர்தலில் நிறுத்தினார்கள். அந்த சூழ்ச்சிகளை முறியடித்து அ.தி.மு.க. அடிப்படை உரிமையை மீட்க இந்த கழகம் உருவாக்கப்பட்டது. தேர்தலுக்காக தனிக்கட்சி தொடங்குவது குறித்தும், போட்டியிடுவது நாங்கள் எந்த முடிவும் எடுக்கவில்லை.
இன்றைக்கு அ.தி.மு.க. வெற்றி பெற வேண்டும் என்று டி.டி.வி.தினகரன், அண்ணன் எடப்பாடி பழனிசாமி சொல்கிறார்கள். எதிரும் புதிருமாக இருந்தவர்கள் இன்று இணைந்திருக்கிறார்கள். அவர்கள் நினைத்தால் எங்களையும் இணைக்கலாம். அவ்வாறு நடந்தால் தேசிய ஜனநாயக கூட்டணி மாபெரும் வெற்றியடையும்.
2-வது தர்மயுத்தத்தை நான் தொடங்கவே மனோஜ்பாண்டியன், வைத்திலிங்கமும்தான் காரணம். இன்றைய கூட்டத்தில் நிர்வாகிகளை மனதின் குரலாக எழுதிக் கொடுக்க சொன்னேன். உங்களின் குரலாகத்தான் ஒலிப்போம் என்று அவர்கள் கூறிவிட்டார்கள். அ.தி.மு.க.வில் இணைய நான் ரெடி. டி.டி.வி.தினகரன், எடப்பாடி பழனிசாமி ரெடியா?”
இவ்வாறு அவர் கூறினார்.




கருத்துக்கள்