நெல்லை: நிச்சயமான மணப்பெண் உயிரிழப்பு !
நெல்லையில் இருவேறு சமூகத்தைச் சேர்ந்த காதல் ஜோடிகளுக்கு குடும்பத்தார் சம்மதத்துடன் திருமணம் செய்து வைக்க திருமண அழைப்பிதழ் அச்சடிக்கபப்ட்ட நிலையில், இளம்பெண் உயிரிழந்த நிலையில், காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆணவக்கொலை செய்யப்பட்டாரா என, போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை, பேட்டையை சேர்ந்தவர் பச்சிராஜன். இவர் அரசு பேருந்து டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி, ரேவதி. தனியார் பள்ளி ஆசிரியை. இவர்களது முதல் மகளுக்கு திருமணமான நிலையில், இரண்டாவது மகள் நெல்லையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி இயற்பியல் இரண்டாமாண்டு படித்து வந்தார். இந்த நிலையில், சிவமதியும் பேட்டை கடசர் தெருவைச் சேர்ந்த ஆனந்த கிருஷ்ணன் என்பவரும் காதலித்து வந்துள்ளனர்.
இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சார்ந்தவர் என்பதால், இவர்களின் காதலுக்கு சிவமதியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். உறவுக்காரின் மகன் ஒருவரை சிவமதிக்கு திருமணம் செய்து வைக்க முயன்றபோது சிவமதி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், வேறு வழியின்றி ஆனந்த கிருஷ்ணனுக்கே திருமணம் செய்து வைப்பதாகக் கூறி உறுதியளித்ததுடன் திருமணத்திற்கான ஏற்பாடுகளும் நடந்து வந்தது.
இவர்களது திருமணம், வரும் 6-ம் தேதி தென்காசி மாவட்டம், புளியரையில் உள்ள சிவகாமி அம்பாள் – சதாசிவ மூர்த்தி திருக்கோயிலில் நடைபெறுவதாக திருமண அழைப்பிதழும் அச்சடிக்கப்பட்டு உறவினர்கள், நண்பர்களுக்கு விநியோகிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், சிவமதியின் உறவினர்கள் அவரது பெற்றோரிடம் திருமணத்தை நிறுத்துமாறு கூறியதாக கூறப்படுகிறது.
இதனால், இரு தரப்பு வீட்டினருக்கும் மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், நேற்று (1-ம் தேதி) இரவில் சிவமதிக்கு உடல்நிலை சரியில்லை எனக்கூறி, டவுண் கண்டியப்பேரியில் உள்ள அரசு மருத்துவமனையில் கழுத்தில் காயங்களுடன் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகக் கூறியுள்ளனர். இத்தகவல் அறிந்த பேட்டை காவல் நிலைய போலீஸார் மர்மசாவு என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இச்சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.





கருத்துக்கள்