advertisement

திமுக அரசுக்கு அன்புமணி கண்டனம்

ஜன. 14, 2026 6:47 முற்பகல் |

 

பா.ம.க. தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த கர்லாம்பாக்கம் காலனி கிராமத்தில் கடந்த டிசம்பர் 27-ஆம் தேதி இருவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததற்கும், 40-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கும் அப்பகுதியில் வினியோகிக்கப்பட்ட பாக்டீரியா கலந்த குடிநீரைக் குடித்தது தான் காரணம் என்று ஆய்வில் தெரியவந்திருக்கிறது. பொதுமக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும் என்ற அடிப்படைத் தேவையைக் கூட நிறைவேற்ற முடியாமல் திமுக அரசு தோல்வியடைந்திருப்பது கண்டிக்கத்தக்கது.கர்லாம்பாக்கம் காலனியில் குடிநீர் குழாய்கள் மூலம் வினியோகிக்கப்பட்ட குடிநீரைக் குடித்த ஏழுமலை, சுதா ஆகிய இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பயனின்றி உயிரிழந்தனர். மேலும் 40-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர மருத்துவத்திற்குப் பிறகு உடல் நலம் தேறியுள்ளனர். இந்த சோகத்தின் சுவடுகள் கர்லாம்பாக்கம் காலனியில் இன்னும் அகலவில்லை.

கர்லாம்பாக்கம் காலனியில் வினியோகிக்கப்பட்ட குடிநீரில் முறையாக குளோரின் கலக்கப்படாதது தான் பாக்டீரியா கிரிமி தாக்குதலுக்கு காரணம் என்றும் ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சமூகத்தின் அடித்தட்டு மக்கள் வாழும் பகுதியில் குடிநீர் வழங்குவதில் மிகுந்த அலட்சியம் காட்டப்பட்டிருப்பதும், குடிநீரில் குளோரின் கலக்க வேண்டும் என்ற அடிப்படைக் கடமையைக் கூட திமுக அரசு நிறைவேற்றத் தவறி விட்டதும் உறுதியாகியிருக்கிறது.மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீரை வழங்கத் தவறியதற்காக திமுக அரசு வெட்கப்பட வேண்டும். அடிப்படைத் தேவைகளைக் கூட நிறைவேற்றத் தவறிய திமுக அரசுக்கு வளர்ச்சி குறித்து பேச எந்தத் தகுதியும் இல்லை. பாதுகாக்கப்பட்ட குடிநீரை வழங்கத் தவறிய தோல்விக்கு பொறுப்பேற்று, உயிரிழந்த இருவர் குடும்பங்களுக்கும் தலா ரூ.25 லட்சமும், பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு தலா ரூ. 5 லட்சமும் திமுக அரசு இழப்பீடாக வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement