சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை முழுமையாக திறக்கப்பட வேண்டும் - பாஜக மாவட்ட தலைவர் ஆர்.சித்ராங்கதன் கோரிக்கை
தூத்துக்குடி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை பொதுமக்களுக்கு முழுமையாக பயன்பெற வேண்டும் என பாஜக மாவட்ட தலைவர் ஆர்.சித்ராங்கதன் கோரிக்கை வைத்துள்ளார்.
மத்திய அரசின் பிரதான் மந்திரி ஜன்விகாஸ் காரியகிரம் (PMJVK) திட்டத்தின் கீழ் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் ரூ.136.35 கோடி மதிப்பில், 637 படுக்கைகள் கொண்ட சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டி முடிக்க பட்ட நிலையில் இந்த மருத்துவமனை அனைத்து தரப்பினருக்கும் முழுமையாக பயன்படும் வகையில் செயல்படுத்தப்பட வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் ஆர்.சித்ராங்கதன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், இந்த மருத்துவமனை மகப்பேறு சிகிச்சைக்கு மட்டும் ஒதுக்கப்படாமல், இதய நோய், நரம்பியல், சிறுநீரக, விபத்து, புற்றுநோய் உள்ளிட்ட அனைத்து சூப்பர் ஸ்பெஷாலிட்டி சிகிச்சைகளும் வழங்கும் மருத்துவமனையாக செயல்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மேலும், தூத்துக்குடி மற்றும் சுற்றுவட்டார மாவட்ட மக்களுக்கு இந்த மருத்துவமனை மிக அவசியமானதாக இருப்பதால், மத்திய அரசு வழங்கிய நிதியில் கட்டப்பட்ட இந்த மருத்துவமனை மக்கள் நலனுக்காக முழுமையாக திறக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனை வலியுறுத்தும் வகையில்,ஜனவரி 20ஆம் தேதி மாலை 4 மணிக்கு, தூத்துக்குடி VVD சிக்னல் அருகில்
பாஜக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.இந்த ஆர்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று ஆதரவு தெரிவிக்க அழைப்பு விடுத்துள்ளார்..




கருத்துக்கள்