முதலமைச்சர் வேடம் போடுவதோ, நடிப்பதோ கிடையாது...! சபாநாயகர் அப்பாவு
நெல்லையில் இன்று 'சபாநாயகர் அப்பாவு' செய்தியாளர்களை சந்தித்து உரையாடினார்.அப்போது அவர் தெரிவித்ததாவது,"ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரம் தொடர்பாக அரசியல்வாதிகள் பதில் தெரிவித்துவிட்டார்கள். முதலமைச்சர் எப்போதும் இரட்டை வேடம் போட்டது கிடையாது. வேடம் போடுவது நடிகர்களுடைய செயல்.பவன் கல்யாண் நடிகர். அவர் வேடம் போடலாம். தமிழக முதலமைச்சர் வேடம் போடுவதும் கிடையாது, நடிப்பதும் கிடையாது.
மக்களுக்கு தேவையானவற்றை அவர் செய்து கொடுத்துள்ளார்.பல்வேறு கோவில்கள் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. ஓடாத தேர்கள் ஓடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.தி.மு.க. குறித்து பேசுபவர்களின் பார்வையில் கோளாறு இருக்கலாம். அறநிலையத் துறை சார்பில் கல்லூரிகள் கட்டுவதற்கு முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டார்.
ஆனால் நீதிமன்றத்திற்கு சென்று அதற்கு தடை வாங்கி விட்டார்கள். எல்லோருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் தமிழக அரசு நடந்து வருகிறது. எந்த குறைபாடு இருந்தாலும் அதனை சுட்டிக்காட்டினால் உடனடியாக சரி செய்து கொடுக்கப்படுகிறது.சட்டமன்றத்தில் நேரடி ஒளிபரப்பு தொடர்பாக பல்வேறு விதிகள் வகுக்கப்பட்டுள்ளது. தற்போது எந்தெந்த கேள்விகள் ஒளிபரப்பு செய்ய வேண்டுமோ அதை நேரடியாக ஒளிபரப்பு செய்து வருகிறோம்.
வரும் சட்டமன்றம் முடிவதற்குள் முழுமையாக அனைத்து பேச்சுகளும் ஆன்லைனில் ஏற்றப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.
கருத்துக்கள்