சாப்பாட்டினை தவிர்க்க கூடாது - மாணவிகளுக்கு அமைச்சர் கீதாஜீவன் அட்வைஸ்
தூத்துக்குடி மாநகராட்சி, தஸ்நேவிஸ் மாதா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று (02.02.2026), தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் மாணவிகளுக்கு வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் தெரிவித்ததாவது: அரசின் முயற்சியாக, எந்தவொரு மாணவ மாணவியர்களும் உயர்கல்வி கற்காமல் வீட்டில் இருக்க கூடாது எனவும், அனைவரும் ஏதாவது ஒரு கல்லூரியில் சேர்ந்து, மேற்படிப்பு படிக்க வேண்டும் என்ற அடிப்படையில் நமது மாவட்டத்தில் 90 சதவீதம் மாணவ மாணவியர்கள் கல்லூரியில் சேர்க்கப்பட்டு பயின்று வருகின்றனர் என்பதை கூறிக்கொள்ள விரும்புகிறேன். அதுதான் நமது தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் எண்ணம் ஆகும். எல்லாரும் பள்ளிக் கல்வி படிப்புடன் மட்டுமல்லாது, கல்லூரிக் கல்வி வரை படிக்க வேண்டும் என்று முயற்சி எடுத்து வருகிறார்கள்.
நீங்கள் 12ஆம் வகுப்பு முடித்த பின்னர், கல்லூரியில் சேர்ந்த பின்னர் புதுமைப்பெண் என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். நீங்கள் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் மீன்வளத்துறை ஆகிய துறைகளின் கீழ் நீங்கள் ஏதாவது வாரியங்களில் உதவித்தொகை பெற்றாலும், உங்களுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் மாதந்தோறும் ரூ.1000/- வழங்கப்படும்.
11 வருடங்கள் கழித்து, ஒரு பெண் எனது அம்மா என்னை அன்றைக்கு படிக்க வைக்கவில்லை என்று கூறி, தற்போது இத்திட்டம் செயல்படுத்தப்பட்டவுடன் இன்றைக்கு நான் கல்லூரியில் சேர்ந்து படிக்கின்றேன் எனவும், மேலும், பெண்கள் படிப்பதற்கான வயதை அரசு தளர்வு செய்திருப்பதால், ஒரு கல்லூரியில் தாய் மூன்றாவது வருட படிப்பையும், மகன் முதலாமாண்டு படிப்பு என தாய் மற்றும் மகன் இருவரும் ஒரே கல்லூரியில் சேர்ந்து பயின்று வருகின்றனர்.
11 மற்றும் 12ஆம் வகுப்பு வரை மட்டுமல்லாது, தொடர்ச்சியாக நான் முதல்வன் திட்டத்தில் இணைந்திருக்கும் பொழுது, டிஎன்பிஎஸ்சி, யூபிஎஸ்சி என அனைத்து பயிற்சிகளும் இத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வருகிறது. தொழிற் சம்பந்தமான அனைத்திற்கும் பயிற்சிகள் வழங்கப்படுகிறது. அதன்மூலம் மானியத்தில் கடன் உதவிகள் வழங்கப்படுகிறது. இவ்வாறு தொடர்ச்சியாக நமது வாழ்வாதாரத்தில் உயரிய நிலை அடைவதற்கு நமது தமிழ்நாடு முதலமைச்சர் அனைத்து வசதிகளையும் செய்து தருகிறார்கள்.
மேலும், தற்பொழுது இது போட்டி நிறைந்த உலகமாகும். ஏனென்றால் எல்லாரும் படிக்கின்றனர். நமது திறனை மேம்படுத்திக் கொள்ளும் போதுதான், நமக்கான வேலைவாய்ப்பு கிடைக்கும். எனவே, அதற்கு தகுந்தாற் போல் பள்ளி கல்லூரிகளில் திறனை மேம்படுத்திக் கொள்வதற்கு கற்று தருகின்ற அனைத்தையும் கற்றுக் கொள்ள வேண்டும். வாய்ப்பை தவற விடக்கூடாது. நீங்கள் இப்பொழுதே நல்ல முறையில் படிக்க வேண்டும். நீங்கள் இந்த காலத்திற்கு ஏற்றாற் போல் உங்களை திறமையானவர்களாக உருவாக்கி கொள்ளுங்கள்.
அதேப்போல் உங்களின் உடல்நலமும் மிக முக்கியம். சாப்பாட்டினை தவிர்க்க கூடாது. அதுதான் நமக்கு ஊட்டச்சத்து தரும். சத்துள்ள உணவினை சாப்பிடுகின்ற பொழுதுதான் உடல் சீராக இயங்கும். மூளையின் வளர்ச்சி, மூளையின் செயல்பாடு சிறப்பாக இருக்கும். பெண்களின் ஆரோக்கியத்திற்கு கட்டாயமாக ஊட்டச்சத்துள்ள உணவு தேவை. எனவே, சத்தான உணவை சாப்பிடுங்கள். தானியவகைகள், பழங்கள், கீரை வகைகள், காய்கறிகள் ஆகிய சத்தான உணவினை சாப்பாட்டில் எடுத்துக்கொள்ளுங்கள். உடல் ஆரோக்கியம் இருந்தால் தான், படிக்க முடியும்.
நிச்சயமாக இந்த மிதிவண்டியினை நீங்கள் பயன்படுத்த வேண்டும். அது உங்களுக்கு நல்ல உடற்பயிற்சியாகும். உடல் வலிமையாகும். எனவே, மிதிவண்டியை பெறுகின்ற அனைவரும் அதனை ஓட்டுவதற்கு பழகிக் கொண்டு, பயன்படுத்துங்கள். உங்கள் அனைவருக்கும் நல்ல எதிர்காலம் அமைய வாழ்த்துகிறேன் என சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர், தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் பலர் கலந்து கொண்டனர்.





கருத்துக்கள்