தங்கம்மாள்புரம் ஆலயப் பிரச்சினைக்கு சுமூக தீர்வு;
தூத்துக்குடி மாவட்டம், சேர்வைக்காரன்மடம் ஊராட்சிக்கு உட்பட்ட தங்கம்மாள்புரம் கிராமத்தில், பரி. பேதுரு ஆலய நிர்வாகம் மற்றும் இந்து பத்திரகாளியம்மன்–அருள்மிகு ஸ்ரீ நாராயணசாமி திருக்கோவில் தரப்பினருக்கு இடையே நீண்ட காலமாக நிலவி வந்த பிரச்சினைக்கு சுமூகத் தீர்வு காணப்பட்டுள்ளது.
இப்பிரச்சினை தொடர்பாக வட்டாட்சியர் அலுவலகத்தில் சமாதானக் கூட்டங்கள் நடத்தப்பட்டு, காவல்துறையினர் கண்காணிப்பில் ஆண்டுதோறும் திருவிழா மற்றும் தேரோட்ட நிகழ்வுகள் நடைபெற்று வந்தன.
இந்நிலையில், இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தி 08.08.2025 அன்று சுமூக சமரச உடன்படிக்கை செய்து கொண்டனர். அதன் அடிப்படையில், பரி. பேதுரு ஆலயத்தின் நுழைவு வாயில் மாற்றி அமைக்கப்பட்டு, தேரோட்டம் ஆலய வளாகத்திற்குள் செல்லாமல் சுமூகமாக நடைபெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, 28.08.2025 அன்று தங்கம்மாள்புரம் சமூகக் கூடத்தில் நடைபெற்ற "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. எம்.சி. சண்முகையா அவர்களிடம், முன்னாள் சேர்வைக்காரன்மடம் ஊராட்சி துணைத்தலைவர் ஏஞ்சலின் ஜெனிட்டா தலைமையில் இரு தரப்பினரும் இணைந்து மனு அளித்தனர்.
அந்த மனுவில், இரு தரப்பினருக்கும் இடையே ஏற்கனவே சமரச உடன்படிக்கை ஏற்பட்டுள்ளதால், வட்டாட்சியர் அலுவலகத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்த சமாதானக் கூட்ட நடவடிக்கைகளை ரத்து செய்து, பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, 17.06.2026 அன்று நடைபெற்ற மக்கள் முன்னோடி மனுநீதி நாள் முகாமில், மனு எண்: 18044814 மூலம் திருமதி ஏஞ்சலின் ஜெனிட்டா மாவட்ட நிர்வாகத்திடம் மேல்முறையீட்டு மனு அளித்தார்.
அதில், இரு தரப்பினரும் ஏற்கனவே சுமூக சமரசம் செய்து கொண்டுள்ள நிலையில், சமாதானக் கூட்ட நடவடிக்கைகளை அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த மனுவை பரிசீலித்த தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகம், ந.க.அ4/126/2026 , நாள் 30.06.2026 என்ற கோப்பு எண்ணில் நடவடிக்கை மேற்கொண்டு, 01.07.2026 அன்று மனுதாரருக்கு பதில் வழங்கியது.
அதில், இரு தரப்பினரும் 08.08.2025 அன்று சமரச உடன்படிக்கை செய்து கொண்டதும், அதன் அடிப்படையில் தேரோட்டம் சுமூகமாக நடைபெற்றதும் பதிவு செய்யப்பட்டு, இனி வருங்காலங்களில் மத நல்லிணக்கத்துடனும், சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படாத வகையிலும் இரு தரப்பினரும் வழிபாடுகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, 08.07.2026 அன்று நடைபெற்ற மக்கள் மனுநீதி நாள் முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு. குருச்சந்திரன் அவர்களை சந்தித்த திருமதி ஏஞ்சலின் ஜெனிட்டா , ஆலயப் பிரச்சினையில் நிர்வாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதற்கு நன்றி தெரிவித்தார்.
மேலும், சேர்வைக்காரன்மடம் ஊராட்சியின் குடிநீர் மற்றும் நீர்வாழ்வாதாரப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், மாவட்ட நிர்வாகத்திடம் மூன்று முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தார்.
அதில்,
* சுமார் ரூ.23 கோடி மதிப்பிலான பேய்குளம் கண்மாய் தூர்வாரும் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும்.
* நிலத்தடி நீர் பாதுகாப்பிற்காக பேய்குளம் கண்மாய் மற்றும் கிராமப் பகுதிகளில் ரீசார்ஜ் ஷாஃப்ட் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
* சிவஞானபுரம் பகுதி புல எண்கள் 37 மற்றும் 136 தொடர்பான அரசு தரிசு நில விவகாரத்தில் உரிய மறுஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் .
*
என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருமதி ஏஞ்சலின் ஜெனிட்டா கூறுகையில்:
"எதிர்கால தலைமுறையினர் மத நல்லிணக்கத்துடனும் ஒற்றுமையுடனும் வாழ வேண்டும் என்ற உயர்ந்த நோக்கில், இரு தரப்பினரின் பெரியவர்கள் எடுத்த சமரச முடிவுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், மக்கள் முன்னோடி மனுநீதி நாள் மனுவை பரிசீலித்து நடவடிக்கை மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் திரு. விஷு மகாஜன், மாவட்ட வருவாய் அலுவலர் திரு. குருச்சந்திரன், வட்டாட்சியர் திரு. திருமணி ஸ்டாலின், வருவாய் ஆய்வாளர் திருமதி மேகலா, கிராம நிர்வாக அலுவலர் திரு. ஆனந்த் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலர்களுக்கும் எனது மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆலயப் பிரச்சினைக்கு தீர்வு கிடைத்திருப்பது ஒரு புதிய தொடக்கம். இனி சேர்வைக்காரன்மடம் ஊராட்சியின் குடிநீர் பாதுகாப்பு, பேய்குளம் கண்மாய் மேம்பாடு, நிலத்தடி நீர் பாதுகாப்பு மற்றும் அரசு தரிசு நிலம் தொடர்பான மக்களின் நீண்டகால கோரிக்கைகளும் நிறைவேறும் என்ற நம்பிக்கை உள்ளது. மக்கள் நலனுக்கான எனது பொதுப்பணிகள் தொடர்ந்து நடைபெறும்," என்றார்.
தங்கம்மாள்புரம் ஆலயப் பிரச்சினைக்கு சுமூகத் தீர்வு ஏற்படுவதற்காக மேற்கொண்ட முயற்சிகளிலும், தொடர்ந்து மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகளை மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்வதிலும் ஏஞ்சலின் ஜெனிட்டாவின் விடாமுயற்சியை அப்பகுதி பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.
"ஒரு பிரச்சினைக்கு தீர்வு காண்பதோடு மட்டுமல்லாமல், அடுத்த தலைமுறையின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் குடிநீர் மற்றும் நீர்வளப் பாதுகாப்பை முன்னிறுத்தி செயல்படுவது பாராட்டுக்குரியது" என பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.





கருத்துக்கள்