மொழி என்பது குழந்தைகளுக்கு பாரமாக மாறி விட கூடாது-கனிமொழி எம்.பி.,
தூத்துக்குடி: மொழி என்பது எந்தவொரு குழந்தைக்கும் பாரமாக மாறி விடக் கூடாது என்று திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் திமுகவின் துணைப் பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி இன்று (ஜூலை 15) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, மாெழிக்கொள்கை குறித்த கேள்விக்கு பதிலளித்த கனிமொழி எம்.பி., "திமுக சார்பில் நாங்கள் தொடர்ந்து கூறி வருவது இரண்டு மொழி கொள்கை தான். மொழி என்பது எந்தவொரு குழந்தைக்கும் பாரமாக மாறிவிடக் கூடாது. பல மொழிகளைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆர்வம் இருக்கக் கூடிய மாணவ, மாணவிகள் நிச்சயமாக தேடி படிக்கக் கூடிய அனைத்து வாய்ப்புகளும் இன்றைய உலகத்தில் இருக்கிறது. நிறைய மொழிகளை கற்றுக் கொள்ள வேண்டும் என்றால் அதற்கான வழிமுறைகள் உள்ளன.
ஆனால் பாடத்திட்டத்துடன் ஒவ்வொரு குழந்தை மீதும் இன்னொரு சுமையாக மொழியை மாற்றுவது என்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. ஒன்றியத்தில் உள்ள பாஜக தொடர்ந்து அதனை செய்து வருகிறது. குழந்தைகளுக்கு ஒரு மனச்சோர்வை அளிக்கக்கூடிய வகையில் மேலும் மேலும் மும்மொழி கொள்கை, மும்மொழி கொள்கை என்று வலியுறுத்தி அவர்களது மனதிலே ஒரு அவ நம்பிக்கையை ஏற்படுத்தக் கூடாது என்பதை திமுக தொடர்ந்து கூறி வருகிறது" என்றார்.
ஒன்றிய அரசைக் கண்டித்து மாநில அரசு அறிக்கை வெளியிடாது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "ஒன்றிய அரசாங்கத்தை எதிர்த்து தமிழ்நாடு மாநில அரசு எதுவுமே பேசுவதில்லை என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளனர். அதனால் அவர்களிடம் இருந்து நாம் எதிர்பார்ப்பதே தவறு" என்று விமர்சித்தார். பேட்டியின் போது முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் மற்றும் திமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.





கருத்துக்கள்