advertisement

தேனி: 150 அடி ஆழ கிணற்றில் தள்ளி சிறுவர்கள் கொலை - இளைஞர் கைது

ஜூலை 26, 2026 7:14 முற்பகல் |

 

தேனியில் புறா பிடித்து தருவதாக ஆசை வார்த்தை கூறி, 2 பள்ளி மாணவர்களை இளைஞர் ஒருவர் 150 அடி ஆழ கிணற்றில் தள்ளி படுகொலை செய்த சம்பவம்  பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே உள்ள ரங்கநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னத்தம்பி. இவரது மகன்கள் ஸ்ரீஹரிஷ்(11), சபரீஷ்(10).இவர்கள் அங்குள்ள பள்ளியில் முறையே 6 மற்றும் 5-ம் வகுப்பு படித்து வந்தனர். சகோதரர்களான இவர்களுக்கு புறா வளர்ப்பதில் சமீபகாலமாக அதிக ஆர்வம் இருந்ததாக தெரிகிறது.இதனிடையே, கடந்த வெள்ளிக்கிழமை மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த சிறுவர்கள் இருவரும், மாலை 5 மணியளவில் வெளியில் விளையாட சென்றுள்ளனர்.

ஆனால், இரவு நேரமாகியும் அவர்கள் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவர்களின் பெற்றோர், இருவரையும் பல இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் அவர்கள் கிடைக்கவில்லை. இதனால் பயந்துபோன பெற்றோர், போடிநாயக்கனூர் ஊரகக் காவல் நிலையத்தில் தகவல் அளித்தனர்.

இதன்பேரில், போலீசாரும் சுற்றுப்பகுதிகளில் சிறுவர்களை தேடி வந்தனர். அப்போது, கரட்டுப்பட்டி பகுதியில் உள்ள தனியார் தோட்டத்து கிணற்றில் 2 சிறுவர்களின் உடல்கள் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து, தீயணைப்புத் துறையினருடன் அங்கு சென்ற போலீசார், கிணற்றில் இருந்த சிறுவர்களின் உடல்களை மீட்டனர்.

விசாரணையில், அவை மாயமான ஸ்ரீஹரிஷ், சபரீஷ் ஆகியோரின் உடல்கள் என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர்களின் உடல்களை பிரேதப் பரிசோதனைக்காக போலீசார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.போலீசார் மேற்கொண்ட விசாரணையில், சிறுவர்கள் வசிக்கும் அதே தெருவைச் சேர்ந்த கேசவ் பாலாஜி(19) என்ற இளைஞருடன் அவர்கள் கடைசியாக சென்றது தெரியவந்தது.

பின்னர் கேசவ் பாலாஜியை போலீசார் தேடி சென்றபோது, அவர் தலைமறைவானது தெரியவந்தது. தொடர்ந்து நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில், போடி அருகே பதுங்கி இருந்த கேசவ் பாலாஜியை போலீசார் மடக்கி பிடித்தனர்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. அதாவது, சிறுவர்களுக்கு புறாக்கள் மீது தீரா ஆசை இருந்ததை தெரிந்து கொண்ட கேசவ் பாலாஜி, அவர்கள் இருவரையும் வெள்ளிக்கிழமை மாலை அழைத்து சில உயர்ரக ஜாதி புறாக்கள் ஊருக்கு வெளியே உள்ள கிணற்றுக்குள் இருப்பதாக கூறிய அவர், சிறுவர்களை அங்கு அழைத்து சென்றதாக தெரிகிறது. பின்னர், கிணற்றுக்குள் புறா இருக்கிறதா என பார்க்குமாறு அவர் கூறியதை நம்பி, சிறுவர்கள் கிணற்றுக்குள் எட்டிப் பார்த்துள்ளனர்.

அப்போது அவர்கள் இருவரையும் கிணற்றுக்குள் தள்ளி கொலை செய்ததாக போலீசாரிடம் கேசவ் பாலாஜி வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, கேசவ் பாலாஜியை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். எதற்காக அவர் சிறுவர்களை கொலை செய்தார்? சிறுவர்களின் பெற்றோருக்கும், கேசவ் பாலாஜிக்கும் ஏதேனும் முன்விரோதம் இருந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement
advertisement