திருச்செந்தூரில் இரு தரப்பினருக்கு இடையே மோதல் - 5 பேருக்கு அரிவாள் வெட்டு
திருச்செந்தூர் கோகுல்நகரைச் சேர்ந்தவர் கண்ணன். இவர் சமையல் கேஸ் ஏஜென்சி நிறுவனத்தில் சிலிண்டர் வினியோகம் செய்யும் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் சோனகன்விளை நீல்புரம் பகுதியில் கியாஸ் சிலிண்டர் வினியோகம் செய்வதற்காக லோடு ஆட்டோவில் சென்றார்.
அப்போது அந்த வழியாக நீல்புரத்தைச் சேர்ந்த ஜெபராஜ் (வயது 60) ஓட்டி வந்த பைக் எதிர்பாராதவிதமாக லோடு ஆட்டோவில் உரசியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த ஜெபராஜ் கண்ணனை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து நேற்று இரவில் கண்ணனுக்கு ஆதரவாக சிலர் நீல்புரத்துக்கு சென்று ஜெபராஜிடம் தட்டி கேட்டு அவரை அரிவாளால் வெட்டினர். இதில் தலையில் பலத்த காயமடைந்த ஜெபராஜ் திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதனை அறிந்த ஜெபராஜின் மகன் நவீன் (வயது 32) திருச்செந்தூருக்கு சென்றார். தந்தை தாக்கப்பட்டது தொடர்பாக நவீன் தனது நண்பர்களுடன் எதிர் தரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக திருச்செந்தூர் யூனியன் அலுவலகம் முன்பாக சென்றார். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் அரிவாள், உருட்டு கட்டையால் தாக்கி கொண்டனர்.
இதில் நவீன், கந்தவேல் (21), நட்டார் ஆனந்த் (20) ஆகியோருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. அங்குள்ள நடைபாதை ஓட்டலில் உணவு வாங்க வந்த தூத்துக்குடியைச் சேர்ந்த விஜயபிரகாசுக்கும் (27) அரிவாள் வெட்டு விழுந்தது.
படுகாயமடைந்தவர்கள் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் நிலவியதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
கருத்துக்கள்