கோவில்பட்டியில் அரசு மருத்துவர் பணி நீக்கம்:மனித உரிமைகள் ஆணையம் அதிரடி தீர்ப்பு
கோவில்பட்டியில் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த பெண்ணை, தன் மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளித்த அரசு டாக்டரை பணி நீக்கம் செய்து மனித உரிமைகள் ஆணையம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே இளையரசனேந்தலைச் சேர்ந்த ராணுவ வீரர் கருப்பசாமியின் மனைவி ஜெயா 2018ல் தீக்காயமுற்று கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அரசு மருத்துவராக பணிபுரிந்த பிரபாகரன் தனது தனியார் மருத்துவமனைக்கு அந்த பெண்ணை அழைத்து சென்று சிகிச்சை அளித்தார். பல நாட்கள் சிகிச்சை அளித்தும் பலன் இன்றி அந்தப் பெண் உயிரிழந்தார்.
அவரது கணவர் ராணுவ வீரர் மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்தார். இது தொடர்பாக மனித உரிமைகள் ஆணையம் விசாரணை நடத்தி வந்தது. இந்நிலையில், இன்று (மே 19) மனித உரிமைகள் ஆணையம் பிறப்பித்துள்ள உத்தரவில், "ராணுவ வீரர் கருப்பசாமிக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு தமிழக அரசு வழங்க வேண்டும். இந்த தொகையை டாக்டர் பிரபாகர் ரூ.40 லட்சமும், டாக்டர் வெங்கடேஸ்வரன் ரூ.2 லட்சமும், ஊழியர்கள் குமரேஸ்வரி, குரு லட்சுமி தலா ரூ.1 லட்சமும், தமிழக அரசு ரூ.6 லட்சமும் வழங்க வேண்டும்.
டாக்டர் பிரபாகரை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும்; மீண்டும் அரசு பணியில் நியமிக்கக் கூடாது. அவர் மீது குற்றவழக்கு பதிவு செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு டாக்டர்கள் தனியார் மருத்துவமனையில் பணியாற்றுவதை கண்காணிக்க வேண்டும். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் புகார் பெட்டி வைக்க வேண்டும். இவ்வாறு மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கருத்துக்கள்