advertisement

தரிசு நிலத்தை மீட்க மாவட்ட நீதிபதியிடம் மனு - முன்னாள் ஊராட்சி துணைத் தலைவர் அறிவிப்பு

ஜூலை 24, 2026 4:52 முற்பகல் |

தூத்துக்குடி ஏர்போர்ட் அருகே ரூ.100 கோடி அரசு தரிசு நிலம்: 4 ஆண்டுகளாக போராடியும் நடவடிக்கை இல்லை – மாவட்ட நீதிபதியிடம் பொதுமக்கள் சார்பில் மனு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், சேர்வைக்காரன்மடம் ஊராட்சியில், தூத்துக்குடி விமான நிலையம் அருகே அமைந்துள்ள புல எண்கள் 37 மற்றும் 136-ல் உள்ள சுமார் ரூ.100 கோடி மதிப்புடையதாகக் கூறப்படும் அரசு தரிசு நிலத்தை பாதுகாக்கும் நோக்கில், கடந்த நான்கு ஆண்டுகளாக பல்வேறு அரசு அலுவலகங்களை அணுகியும் உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால், பொதுமக்கள் சார்பில் தூத்துக்குடி மாவட்ட முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதியிடம் விரிவான மனு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக முன்னாள் ஊராட்சி துணைத் தலைவர்  ஏஞ்சலின் ஜெனிட்டா தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2022 ஆம் ஆண்டு முதல் சார் ஆட்சியர் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட வருவாய் அலுவலர், வருவாய் நிர்வாக ஆணையர், முதலமைச்சரின் தனிப்பிரிவு உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளிடம் தொடர்ந்து மனுக்கள், மேல்முறையீடுகள் மற்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் மாவட்ட கூடுதல் நடுவர் 12.03.2026 அன்று பிறப்பித்த செயல்முறை ஆணையில், சம்பந்தப்பட்ட நிலம் பழைய வருவாய் பதிவுகளில் "அரசு தரிசு" என இருந்ததாகவும், பின்னர் தனியார் பட்டாவாக மாற்றப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், அந்த மாற்றத்திற்கான முக்கிய ஆதார ஆவணங்களும் "டி.சி.1/93" தொடர்புடைய பதிவுகளும் கிடைக்கவில்லை என்றும் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், சார் ஆட்சியர் விசாரணைக்குப் பிறகு சம்பந்தப்பட்ட பட்டாக்களை ரத்து செய்து, நிலத்தை மீண்டும் அரசு தரிசு நிலமாக மாற்ற பரிந்துரை செய்திருந்தும், இதுவரை பட்டா ரத்து செய்யப்படவில்லை என்றும், அரசு நிலத்தை மீட்கும் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

அதே நேரத்தில், மாவட்ட வருவாய் அலுவலரின் ஆணையில் உரிமையியல் (சிவில்) நீதிமன்றத்தை அணுகுமாறு குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், அரசு நிலத்தை பாதுகாக்கும் நோக்கில் செயல்படும் சாதாரண பொதுமக்களிடம் பல லட்சம் ரூபாய் செலவழித்து சிவில் வழக்கு தொடரும் பொருளாதார வசதி இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக, அரசு தரிசு நிலத்தை மீட்பதற்கான சட்ட நடவடிக்கைகளுக்குத் தேவையான நிதியை பொதுமக்களிடம் இருந்து திரட்டுவதற்காக பிச்சை எடுத்து நிதி சேகரிக்க அனுமதி கோரி மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளிக்கப்பட்டதாகவும், அதற்கும் இதுவரை எந்த முடிவும் தெரிவிக்கப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக தற்போதைய சார் ஆட்சியருக்கு முன்பு பதவி வகித்த சார் ஆட்சியர்கள் காலத்தில், மனுக்களை தொடர்ந்து எடுத்துச் சென்றபோது, ஒரு பெண்ணாக தாம் மிகுந்த மன உளைச்சலையும் அவமானகரமான அனுபவங்களையும் சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதாகவும், அது தொடர்பாக காவல்துறையில் புகார் அளித்ததாகவும், அந்தப் புகாரின் நிலை குறித்து இதுவரை இறுதியான தகவல் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து ஊடகங்கள் வாயிலாகவும், மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அரசின் கவனத்திற்கும் பலமுறை கொண்டு செல்லப்பட்ட போதிலும், இதுவரை உறுதியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

"அரசு நிலத்தை பாதுகாப்பது அரசின் கடமையாக இருக்கும்போது, அந்தப் பொறுப்பை நிறைவேற்ற வேண்டி நான்கு ஆண்டுகளாக அரசு அலுவலகங்களை சுற்றி வர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது தனிப்பட்ட பிரச்சினை அல்ல; பொதுச் சொத்தை பாதுகாக்கும் பொதுநலப் போராட்டம்" என்று திருமதி ஏஞ்சலின் ஜெனிட்டா தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, அரசு தரிசு நிலம் பாதுகாக்கப்பட வேண்டும், ஆவணங்களில் பதிவாகியுள்ள அம்சங்கள் முழுமையாக ஆய்வு செய்யப்பட வேண்டும், பொதுமக்களின் நம்பிக்கை காக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன், பொதுமக்கள் சார்பில் தூத்துக்குடி மாவட்ட முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதியிடம் விரிவான மனு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement
advertisement