தூத்துக்குடி: பனிமய மாதா ஆலய திருவிழா கொடியேற்றம்
உலகப் புகழ்பெற்ற தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத்தின் 444-வது ஆண்டுத் திருவிழா இன்று (ஜூலை 26) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தூத்துக்குடியில் உள்ள உலக பிரசித்தி பெற்ற பனிமய மாதா ஆலயத்தில் ஆண்டுதோறும் ஜூலை 26-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 5-ஆம் தேதி வரை 11 நாட்கள் பெருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, இந்த ஆண்டின் 444-வது பெருவிழாவை முன்னிட்டு இன்று காலை 5 மணிக்கு முதலாம் திருப்பலியும், 6 மணிக்கு இரண்டாம் திருப்பலியும் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமையில், பேராலயப் பங்குத்தந்தை ஸ்டார்லின் முன்னிலையில் பனிமய மாதாவின் உருவம் பொறிக்கப்பட்ட திருக்கொடி எடுத்து வரப்பட்டது.
பேராலய வளாகத்தில் உள்ள கொடிமரத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்களின் ஜெபத்துடனும், கரவொலியுடனும் திருக்கொடி ஏற்றி வைக்கப்பட்டது. அப்போது உலக அமைதியை வலியுறுத்தும் வகையில் பக்தர்கள் வெண்புறாக்களைப் பறக்கவிட்டனர். கொடியேற்றத்திற்கு முன்னதாகப் பக்தர்கள் நேர்த்திக்கடனாகக் கொண்டு வந்த பால் மற்றும் பழங்கள் கொடிமரத்தில் வைக்கப்பட்டு, பின்னர் அனைவருக்கும் வழங்கப்பட்டன. கொடியேற்ற நிகழ்வைத் தொடர்ந்து நண்பகல் 12 மணிக்கு பனிமய மாதாவுக்குப் பொன் மகுடம் அணிவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் சரத்குமார், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீநாத், மாவட்ட ஆட்சியர் விஷா மகாஜன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் குப்தாஉள்ளிட்ட முக்கியப் பிரமுகர்களும், ஆயிரக்கணக்கான பக்தர்களும் கலந்துகொண்டனர்.





கருத்துக்கள்