advertisement

பரமக்குடி - இளம் உள்ளங்கள் சாதனையாளர்களுக்கு விருது வழங்கி சிறப்பிப்பு

ஜன. 26, 2026 7:30 முற்பகல் |

 

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி ஸ்ரீ முத்தாலம்மன் திருமண மஹால் ஏசியில் சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது .

விழாவிற்கு, இளம் உள்ளங்கள் தலைவர் வி.குணசேகரன் தலைமை தாங்கினார். உறுப்பினர் மதுரை எம்.நடராஜமணி, நிர்வாக உறுப்பினர் எஸ்.தெட்சிணாமூர்த்தி, வாரிசு உறுப்பினர் வக்கீல் (ஹான்ஸ்) பி.சுந்தரேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பார்வையாளர்கள் அனைவரது மனதையும் சுண்டி இழுக்கும் வகையில் தனக்குரிய குரல் வளத்துடன் இளம் உள்ளங்கள் செயலாளர் எஸ்.குணசீலன் அனைவரையும் வரவேற்றதுடன்,சாதனையாளர்களுக்கு இந்த விருது வழங்கும் விழா 7-வது ஆண்டாக நடைபெறுகிறது .தற்போது நான்கு பக்கங்கள் மட்டுமே உள்ளது. இதனை ஒரு புத்தகமாக வெளியிட்டு சாதனையாளர்களை அழைப்பதற்கு ஏதுவாக சாதனையாளர்கள் அதிக அளவில்  வர வேண்டும். அவர்களை பாராட்டி விருது வழங்குவதற்கு இளம் உள்ளங்கள் ஒவ்வொரு ஆண்டும் மகிழ்ச்சியோடு தயார் நிலையில் உள்ளதென  கூறினார்.

அரங்கத்தில் இருந்தவர்கள் அனைவரின் கண்களையும் கவர்ந்து இழுக்கும் வகையில் வரவேற்பு பரதநாட்டியமாக மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவில், உத்திரகோசமங்கை திருக்கோவில் போன்ற முக்கிய ஸ்தலங்களில் ஆடிப் புகழ்பெற்ற நான்காம் வகுப்பு மாணவி.  லெ.மஹதிலெனின்  
சிறப்பாக நடைபெற்றது.  இளம் உள்ளங்கள் 50 ஆண்டுகள் கடந்து வந்த பாதை பற்றி நிர்வாக உறுப்பினர் எஸ். பாலசுப்பிரமணியன் பெருமிதத்துடன் பேசியதாவது : 

இளம் உள்ளங்கள் 50 ஆண்டு காலங்களில் மறைந்த புகழ்பெற்ற இயக்குனர், நடிகர்  விசு  சன் டிவியில் அரட்டை அரங்கம் உருவாகுவதற்கு காரணமே பரமக்குடி இளம் உள்ளங்கள் தான் என்று எங்களை பாராட்டி பேசியது பெருமைக்குரிய விஷயமாக கருதுகிறோம் எனவும், அவர்களது சேவைகள் சிலவற்றை பட்டியலிட்டு பெருமையுடன் பேசினார். விழாவில், சிறப்புரையாற்ற வந்தவர்   தமிழக அரசின் பல பரிசுகளையும், பாராட்டுகளையும் பெற்று, பல்வேறு கல்லூரிகளில் மாணவர் - மாணவியர்களுக்கு தன்னம்பிக்கை கொடுத்து பேசிய வெங்காளூர் ஸ்ரீ கோதாவிலாஸ் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை
 ஜி.வி.செளமியா.விழாவிற்கு வந்திருந்த அனைவருக்கும் ஊக்கத்தையும், ஆக்கத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கும் அளவிற்கும் , இளம் உள்ளங்களது தாரக மந்திரமான " உனக்குத் தேவையான எல்லா வலிமையும், உதவியும் உனக்குள்ளேயே உள்ளது " போல மாணாக்கர்கள் தினம் ... தினம் ... யோசித்து முன்னேற்ற பாதையில் சென்று சாதனையாளர்களாக வர வேண்டுமென அவரது பேச்சாற்றலால் அனைவருடைய உள்ளத்தையும் கவர்ந்திருந்தது பாராட்டுக்குரியது.

இளம் உள்ளங்கள் வாரிசு உறுப்பினர் வக்கீல் (ஹான்ஸ்) பி.சுந்தரேஸ்வரன் நிகழ்விற்கு வந்து இருந்த மாணாக்கர்களின் எதிர்கால லட்சியம் என்னவென்று கேட்டு உற்சாகப்படுத்தியதுடன், அவர்களில் பெரும்பாலான மாணவர் - மாணவியர்கள் மாவட்ட ஆட்சியர், மருத்துவர், ராணுவம் - காவல் துறையில் உயர் பொறுப்பு என்று கூறியது பாராட்டுக்குரியது ... மகிழ்ச்சிக்குரியது ... இவர்களை இப்படிப்பட்ட மனநிலையில் கொண்டு வரும் ஆசிரிய பெருமக்களையும் ... பொற்றோர்களையும் ... மனதார பாராட்டுகிறேன் என மனம் திறந்து பேசினார்.மதுரை திரு ஓம்.பிரகாஷ்   ஸ்போர்ட்ஸ் கோட்டா பற்றி வந்திருந்த மாணவர் - மாணவிகளுக்கு மிகச் சிறப்பாக அறிவுரை வழங்கினார்.

அதே போல், தற்போது வளர்ந்து வரக்கூடிய அபாகஸ் பயிற்சி பற்றி அதனுடைய ஆசிரியை  கார்த்திகா அசோக் அபாகஸில்  தேசிய அளவில் தேர்ச்சி பெற்றுள்ள தம்முடைய மாணவர், மாணவியர்களை அழைத்து விழா மேடையில் அவர்களது திறமையை நிரூபித்து காட்டினார். நிகழ்ச்சிகள் தொய்வு இல்லாமல் நடைபெற இடையிடையே பார்வையாளர்களுக்கு அறிவுத்திறன் போட்டி நடத்தி பரிசுகள் வழங்கி சிறப்பித்தனர். 
தொடர்ந்து கல்வி - தனித் திறமைகளில் மாவட்ட , மாநில , தேசிய அளவில் சாதனை படைத்த பரமக்குடி சுபிக்ஷா வித்யாலயம், வெங்காளூர் ஸ்ரீ கோதாவிலாஸ் தொடக்கப்பள்ளி, பரமக்குடி சௌராஷ்ட்ரா மேல்நிலைப்பள்ளி, ஆயிர வைசிய மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஆயிர வைசிய மேல்நிலைப்பள்ளி, கே.ஜெ.இ.எம். மேல்நிலைப்பள்ளி என பள்ளிக்கும், நகருக்கும் பெருமை சேர்த்த மாணவி ஜி.ரக்சிகாதேவி, மாணவர் எஸ்.முனீஸ்வரன், மாணவிகள் எஸ்.தீக்ஷாஶ்ரீ, எஸ்.என்.அபிதா, எம்.சம்யுக்தாஸ்ரீ, மாணவர் எ.அபிநவ் , மாணவிகள் எம்.கனுஷ்கா, எம்.சன்மதி, மாணவர் எஸ்.பவுல் ஜோசுவா, மாணவி எஸ்.பி. வாணிஸ்ரீ, மாணவர்கள் எஸ். ரோஹித்ராஜன், எஸ். பவித்ரன், கே.பி. ஹேமநாதன் ஆகிய சாதனையாளர்களை ஊக்கப்படுத்தி மென்மேலும் வளரும் வகையில் இளம் உள்ளங்கள் விருது வழங்கியும் , மோட்டிவேஷனல் புத்தகம் வழங்கி சிறப்பித்தனர்.

மேலும், சிவகங்கை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி ஆசிரியை  எஸ். மரியஆக்னஸ் 
2025-26 ம் ஆண்டு தேசிய அளவில் பாட்னாவில் நடைபெற்ற அரசு பணியாளர்களுக்கான 200 மீட்டர் ஓட்ட போட்டியில் மூன்றாவது இடம் பெற்று பரமக்குடி - சிவகங்கை நகருக்கு பெருமை சேர்த்த சாதனையாளருக்கும் விருது வழங்கியும், புத்தகம் வழங்கி சிறப்பித்தனர்.  சாதனை படைத்தவர்களது சாதனைகளையும், நிகழ்ச்சியையும் பார்வையாளர்கள் மனது அடுத்து என்ன சொல்லப் போகிறார் என்ற மனநிலையை ஏற்படுத்தும் விதத்தில் தனக்குரிய பாணியில் இளம் உள்ளங்கள் செயலாளர் எஸ்.குணசீலன் திறம்பட தொகுத்து வழங்கினார்.
      விழாவில் , இளம் உள்ளங்கள் உறுப்பினர்கள் வி. கே.பி.கண்ணன், எம். பாலகிருஷ்ணன், பிச்சைமணி, கிருஷ்ணமூர்த்தி, ஏ. எஸ்.பி.மோகன், முத்துராமன், கல்யாணசுந்தரம் ஆகியோர் , மாணவர் - மாணவியர்களுக்கு பயிற்சி அளித்த ஆசிரிய பெருமக்கள் மகரஜோதி , சிவகுரு, நாகராஜன், சரவணன், தினேஷ், அமர்லால்,  மாணாக்கர்கள் ஜெ.வர்ஷிகா, ஆர்.ஷர்னிஹாசிகா, எம். கவிதர்ஷித், பி.கோகுலநிதர்சன், கே.ஏ. சஞ்சனா, எம்.ஆர்.ஹரிநிவாஷ், கே.எஸ். விஷ்ணுபிரியா, ரஷ்வந்த், தன்யாஸ்ரீ , மீரா, பானு ,எஸ். சத்யா, எஸ். அபிநயா, எம்.ஜனனி, உமா மகேஸ்வரி , அசோக், ஜெகன் குமார்,  லெசிந்தர் உள்பட பெற்றோர்கள் முக்கிய பிரமுகர் என்.ஜெகதீசன்,
ஓய்வு பெற்ற வேளாண்மை உயர் அதிகாரி வேலாயுதம், செய்தியாளர்கள் பா.தனசேகர், மாமுஜெயக்குமார் உள்பட நகர் முக்கிய பிரமுகர்கள் திரளாக  கலந்து கொண்டனர். இளம் உள்ளங்கள் பொருளாளர் எஸ்.எம். கார்த்திகேயன் நன்றி கூறினார்.

மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement