திமுக தேர்தல் அறிக்கை கதாநாயகியாக இருக்கும்; கனிமொழி எம்.பி. பேச்சு
தஞ்சாவூர் மத்திய, தஞ்சாவூர் வடக்கு, தஞ்சாவூர் தெற்கு, திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்ட திமுக சார்பில், 2026 சட்டமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் கருத்துக் கேட்பு கூட்டம் இன்று தஞ்சாவூர் ரீனா மித்ரா மஹாலில் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு, திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத்தலைவருமான கனிமொழி எம்.பி. தலைமை தாங்கி, அனைத்து தரப்பினரிடமிருந்தும் கருத்துகளை கேட்டு அறிந்து, மனுக்களை பெற்றுக்கொண்டார்.
இவ்விழா மேடையில் பேசிய கனிமொழி எம்.பி, எல்லாருக்குமான ஒரு ஆட்சியை, அனைவரையும் அரவணைக்கக்கூடிய ஒரு ஆட்சியை முதல்-அமைச்சர் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். எல்லோருக்குமான திட்டங்களை ஒவ்வொரு நாளும் வகுத்து, பாதிக்கப்பட்டவர்கள் கேட்பதற்கு முன்னாலேயே அந்தத் திட்டங்களை நிறைவேற்றி, அவர்களுக்கு உதவிக் கரம் நீட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
அப்படிப்பட்ட ஆட்சி தொடர வேண்டும். இந்தத் திட்டங்கள் தொடர வேண்டும் என்ற காரணத்திற்காக, மக்களுக்கு இன்னும் என்ன தேவை இருக்கிறது என்பதை அறிய, இந்தத் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவிடம், மக்களைத் தேடிச் சென்று, அவர்களைச் சந்தித்து, அவர்களுடைய கருத்துக்களை கேட்டு, இந்தத் தேர்தல் அறிக்கையை மக்களுடைய தேர்தல் அறிக்கையாகத் தயாரிக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் எங்களைப் பணித்திருக்கிறார்கள்.
நேற்று தஞ்சை செங்கிப்பட்டியில் நடைபெற்ற மகளிர் அணி மாநாட்டில், சுமார் 1.50 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். கூட்டம் மிக அதிகமாக இருந்ததால், மாநாட்டுப் பந்தலுக்குள் கூட வர முடியாத அளவுக்கு பெண்கள் பெருந்திரளாக அந்த மாநாட்டில் பங்கேற்றனர். இதன் மூலம், திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி பெண்களுக்கான ஆட்சியாகவும், அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் ஆட்சியாகவும் செயல்பட்டு வருகிறது என்பதைக் தெளிவாகக் காட்டுகிறது. அதனாலேயே பெண்கள் எங்களுடைய பக்கத்தில் உறுதியாக நிற்கிறார்கள் என்பதையும் இது உணர்த்துகிறது என்று பதிலளித்தார்.




கருத்துக்கள்